வள்ளுவன் வரிகளில் அகழ்வாரைத் தாங்கி
பொறுமைக்கு உவமையான நிலமும்
பேரலையாய் எரிமலையாய்
வெடித்துச் சிதறுவது நிகழும் - ஆனால்
மணமுடித்து மதுரைவந்து மறுமணை புகுந்த நாள்முதல்
பேரன்கள் பெயர்த்திகள் எடுத்தும் இந்நாள்வரை சினம்தள்ளி
பொறுமைக்கே பெருமை சேர்த்து சிகரமானாள் - அவள்
இக்காலப் பெண்டிர்க்கு அகரமானாள்
மறுஅன்னை வலக்கரமாய் நலம்தந்தாள் இல்லத்திடையில்
கடிகார நொடிக்கரமாய் வலம்வந்தாள் மனைமடையில்
திடம்கொண்ட பணிநடுவே இடமில்லை பிணிக்கு
தலைவலியோ காய்ச்சலோ சிற்றுண்டி ஏழு மணிக்கு
தந்தைக்குப்பின் தலைமகன் குடும்பப் பொறுப்பேற்க
தமக்கைகள் கரையேற்ற கடல்கடந்து பொருளீட்ட
பெற்றோர் காண மனம் முழுதும் தவியாய் தவித்திருந்தும்
உற்றோர் வாழ உடனிருந்து பணிபுரியும் பொறுப்பிருந்து
தியாகத்தையும் யோகமென கண்டவள் - அவள்
மற்றோர்களிடம் மெய்யன்பு கொண்டவள்
உழைப்புக்கும், செழிப்புக்கும், பொறுமைக்கும், பொறுப்புக்கும்,
உறவுக்கும், நிறைவுக்கும் அனைத்துக்கும் சேர்த்து
தன வாழ்வை உதாரணமாக்கிக் கொண்டவள் - அவள்
என் பிறப்பிற்கே விதையாகி நின்றவள்.
- ராம்ஜி