திரு. சரவணகுமார் அவர்களின் தலைமையிலான MSCF நிர்வாக குழுவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் - இவ்விடர் அடர்ந்த சூழலிலும் இம்மெய்நிகர் கொண்டாட்டத்தை மேய்ப்படுத்தி, நீங்கள் உள்ளதை வைத்து எங்கள் உள்ளத்தை வென்றீர்கள்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் அழகாகவும், கச்சிதமாகவும் தொகுத்து வழங்கப்பட்டது சிறப்பு. குறிப்பாக தமிழ் தாய் வாழ்த்தில் ஒளிர்ந்த தமிழ் தளங்களின் காட்சிகள் செவிக்கு மட்டுமின்றி விழிக்கும் விருந்திட்டது. பிள்ளைகள் அனைவரும் நம் பாரம்பரிய பரதத்திலும் மேற்கத்திய நடனத்திலும் சிறப்பாக அவரவர் ஆடல் திறனை வெளிப்படுத்தினர். ஆதிவாசி தாலாட்டின் நடன உருவாக்கம் பல்கோணக் குறுங்காட்சிகள் கொண்டு நேர்த்தியாக கையாளப்பட்டிருந்தது மிருத்யுனின் தனித்துவம் - பாராட்டுக்கள்.
குழுப்பாடல்கள், டிக்டாக்குகள் மற்றும் குறும்படம் என்று இதை ஒரு பல்சுவைநிகழ்ச்சியாக தந்தமைக்கு கலைக்குழுவுக்கு ஒரு 'சபாஷ்'.
இதில் சிறப்பு அம்சமாக விளங்கியது சிலம்பாட்டம். அரும்புகள், மொட்டுகள், முகைகள் மற்றும் மலர்கள் என அனைத்து வயதினரும் பங்கேற்றது, MSCF இல் பல நுண்கலைகள் மட்டுமின்றி இத்தகைய தற்காப்புக்கலைகளையும் பேணுவது குறிப்பிடத்தக்கது. இக்கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் முயற்சிக்காக எங்கள் ஆசான் திரு. சரவணகுமார் அவர்களையும் அவரது ஆசான் திரு. கார்த்திக் அவர்களையும் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
இறுதியாக - சிறப்பு பட்டிமன்றம் மிக அருமை. நடுவர் அய்யா அவர்கள் கூற்றிற்கிணங்க இதில் பேச்சாளர்கள் மட்டுமின்றி அவர்களின் பேச்சாற்றல்களும் மிகச்சிறப்பாக அமைந்தன. சங்ககாலம் முதல் சார்வரி வரை தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து பற்பல குறிப்புக்களை சேகரித்து வாதங்களில் முன்வைத்தது பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் மெய்நிகர் கொண்டாட்டம் மிகச்சிறப்பு. குழு நிர்வாகிகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகளும்! பாராட்டுக்களும்!!.
--ராம்ஜி