“கற்பின் கொழுந்தே”
=================
அன்பே அமுதே என்றிருந்தேன்; எனை
அரை நொடியில் நீ மறந்துசென்றாய்
பொன்னே கொடியே என்று சொன்னாய்; பின்
பொல்லா துயரில் தவிக்கவிட்டாய்
காதல் கண்மணி நானிருக்க ; நீ
காமம் தேடி அலைந்துசென்றாய்
காதலி கண்களை கலங்கவிட்டு ; நீ
மாதவி மடியில் மயங்கிருந்தாய்
பாதை தொலைந்து பரிதவித்தேன் ; உன்
பார்வை என்மேல் படவில்லை
பொன்னும் பொருளும் தொலைந்தபின்னே;உன்
கண்ணகி கண்ணில் தென்படுதா ??
காலில் சிலம்பை கண்டதுமே ; உன்
கடமை உணர்ச்சி பொங்கிடுதா ??
கற்பின் கொழுந்தே என்று சொல்லி ; என்
கண்களை நீயும் மறைப்பாயோ ??
கண்ட துயரை நான் மறந்து ; உன்
காலில் வந்து வீழ்வேனோ ??
கணவன் உனக்கோ கற்பில்லை ; பின்
கண்ணகி நானுனை ஏற்பேனா ??
பாவம் என்றுன்னை மன்னித்தால் ; நாளை
பாடுபடும் இப்பெண்ணினமே
கற்பிற்கரசி பெயர் வேண்டாம்
கடற்கரைசாலை சிலை வேண்டாம்
கண்ணகி பிரிந்தே வாழ்ந்திடுவாள்
தண்டனை இதுவே உனக்காகும்......
---செல்வ பெருமாள்